slideshow1 slideshow2 slideshow3 slideshow4 slideshow5 slideshow6 slideshow7 slideshow8 slideshow9 slideshow10

Thamira Thuriya Sabai / Copper Pyramid Hall

தாமிர துரிய சபை

தாமிர துரிய சபை பஞ்ச சபைகளுள் ஒன்றான தாமிரசபை அமைந்திருக்கும் நெல்லையம்பதியில் தாமிரபரணி அறிவுத்திருக்கோயிலில் தன்னை பிரதாபிரத்துக் கொண்டிருக்கும் ஓர் யோக சபை. ஞானசபை.

தாமிரபரணி –  இயற்கையாகவே தாமிரத்தின் வளம் பொதிந்து, தாமிரத்தின் புகழ் பாடும் ஸ்தலமாக அமைந்திருப்பது திருநெல்வேலி. தாமிரபரணி ஆறு, பொதிகை மலை, குற்றால அருவி என்று இயற்கை வளங்களை ஒரு சேர தன்னுள் பொதித்து வைத்திருக்கும் வளமான பூமி. அகத்திய பெருமகனார் முதல் பல சித்தர்கள் இன்றும் உலா வந்து கொண்டிருக்கும் சித்தர் பூமி. இறையம்சம் நிறைந்த தெய்வீக பூமி.

பஞ்சசபைகள்:

ஆதி சித்தரான சிவபெருமானார் திருநடனமிடும் ஐந்து நடராஜ ஸ்தலங்களே பஞ்ச சபைகள் என்று வழங்கப்படுகின்றன.

சிதம்பரம் – கனகசபை (ஆகாயம்) (பொன்)

திருவாலங்காடு – ரத்தின சபை (ரத்தினம்)

திருக்குற்றாலம் – சித்திர சபை (கலை)

திருநெல்வேலி – தாமிரசபை (செப்பு)

மதுரை – ரஜத சபை (வெள்ளி)

நடராஜரின் திருநடனம் பிரபஞ்ச இயக்கத்தோடு ஒப்பிடப்படுகிறது.The Cosmic Dance - பிரபஞ்ச அசைவே நடராஜரின் திருநடனம் என்று சித்தர்களும், பக்தர்களும் போற்றித் தொழுது வணங்குகின்றனர்.

தாமிர சபை நடராஜ சபையாக பாரம்பரியமாக விளங்குகிற நெல்லையப்பர் ஆலயம் ஓர் உயர்ந்த ஆற்றல் களமாக நிலைத்திருக்கிறது. பக்தி நெறியில் நெல்லையப்பர் திருக்கோயில் வேர் ஊன்றி நிற்பது போன்று ஆன்மீக, யோக நெறியில் பேராற்றல் களமாக விளங்குவதே தாமிரபரணி அறிவுத்திருக்கோயில்.

ஒவ்வொரு மனிதனும் தானும் அமைதி பெற்று, சமுதாயத்திற்கும் பயனுடைய வகையில் வாழ்வதற்கு தேவையான யோகப் பயிற்சிகளை அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் அருளியுள்ள மனவளக்கலை மூலம் சேவை மனப்பான்மையோடு வழங்கி வருகிறது.

இதற்கு மேலும் மெருகேற்றும் வகையில் தன்னை சமைத்துக் கொண்டிருக்கும் சபையே தாமிர துரிய சபை.

தாமிரதுரியசபை:

தாமிரம் என்றால் செப்பு (Copper). துரியம் என்றால் சரீரத்தில் அமைந்துள்ள சஹஸ்ராதாரச் சக்கரம்.

தாமிர துரிய சபை செப்புத் தகட்டினால் ஆன கூரையோடு பிரமிடு வடிவத்தில் அமைந்து கொண்டிருக்கும் தியான சபை, தொன்று தொட்டு ஆலயங்கள் பிரமிடு வடிவத்திலேயே அமைக்கப்படுகின்றன. கோயில்களின் கோபுரம், தேவாலயங்கள், மசூதிகள், புத்த கோயில்கள் அனைத்தும் பிரமிடு வடிவமே. முன்னோர்கள் இவ்வாறு ஆலயங்களை அமைத்திருப்பதில் தெய்வீகம் கலந்த விஞ்ஞானம் அமைந்து இருக்கிறது.

பிரமிடு வடிமைப்பு பிரபஞ்ச சக்தியை ஈர்த்து தன்னுள் இருப்பாக்கி பிரதிபலிக்கச் செய்ய வல்லது தாமிரம் – செப்பு மெல்லிய உணர்வலைகளை, நுணுகிய ஆற்றலையும் கூட எளிதில் ஈர்த்து பிரதிபலிக்கும் தன்மை உடையது. இதனால் தான் ஆதிகாலங்களில் செம்பு (தாமிரம்) அதிகமாக புழக்கத்தில் இருந்தது.

துரியம்:

மனிதனின் ஸ்தூல சரீரத்தை கடந்த சூக்கும சரீரத்தில் (ஆற்றல் சரீரம்), மையத்தில் அமைந்திருகும் 7 சக்கரங்கள் – மூலாதாரம், ஸ்வாதிஸ்டானம், மணிப்பூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்கினை, துரியம். இவை உடலின் ஆற்றல் திணிவு மையங்களாகும்.

துரியம் - இதனை சகஸ்ராதாரம் – ஆயிரம் இதழ் கொண்ட தாமரை, பிரம்மரந்திரம் – இறைவனின் நுழைவாயில் என்று பலவாறு அழைக்கின்றனர்.

தலை உச்சியில் அமைந்திருக்கும் ஆற்றல் மையம்.

உடலின் ஆரோக்கியம், உயிர் வளம், மூளையின் செயல்திறன், நாளமில்லா சுரப்பிகளின் இயக்கம், மற்றும் மன அமைதியை நிர்வகிக்கும் கட்டுப்பாட்டு மையம்.

பிரபஞ்சத்தோடு நேரடியாக பிணைப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் தெய்வீக மையம், எனவே பிரம்மரந்திரம் என்று அழைக்கிறோம்.

வெளிப்புறத்தில் பிரமிடு வடிமைப்பு பிரபஞ்ச சக்தியை ஈர்த்து கொடுப்பது போல, நமக்கு உட்புறத்தில் இதே செயல்பாட்டினை செய்கிறது துரியமையம்.

தாமிர துரிய சபை சாதாரண பூலோக வாசியை பிரபஞ்சவாசியாக மாற்றி பிரபஞ்ச சக்தியோடு பிணைத்து வைக்கிறது.

இந்த சபைக்குள் தன் பாதச்சுவடுகளை பதிக்கும் ஒவ்வொரு மனிதனும், மனித நிலையினின்று ஆன்ம நிலைக்கு உயர்ந்து தெய்வாம்சம் பெற்று மஹானாக, ஞானியாக மலர்வதற்கு தேவையான அனைத்து சூழலையும் அமைத்துத் தருகிறது. ஒவ்வொரு மனிதனும் பொருளிலும், அருளிலும் தழைத்து செழிக்க வேண்டிய வளங்களை எல்லாம் வாரி வழங்குகிறது.

சபையின் தனித்துவமும் மகத்துவமும்

தாமிர துரிய சபை தன்னை அணுகி வரும் ஒவ்வொருவரையும் தன் இறைகளத்தினுள் அள்ளி அணைத்து பிணைத்து வைத்துக் கொள்கிறது.

சபையினுள் நுழைந்த ஷணமே துரிய மையம் தூண்டப்பட்டு இயக்கம் பெறுகிறது. நம்முள் 72000 நாடி, நரம்புகள், மண்டலங்கள் பிணைப்பை ஏற்படுத்துவது போல, நம் துரியத்திற்கும் பிரபஞ்ச மண்டலத்திற்கும் இடையே ஓர் மெல்லிய, நுண்ணிய நூல் இழை போன்ற ஆற்றல் பிணைப்பு ஏற்படுகிறது. பிரபஞ்ச சக்தி நம்முள் நிரம்பி ததும்புவதை உணரமுடிகிறது. அப்பொழுது முதல் நாம் எங்கிருந்தாலும், எந்த தேசத்தில், நாட்டில் இருந்தாலும், எந்த தொழிலில் ஈடுபட்டிருந்தாலும் பிரபஞ்சப் பிணைப்பை விட்டு அகலாமல் இந்த சபை காத்துக் கொள்கிறது.

தாமிர துரிய சபையினுள் தியானித்தால், உடலின் செல்கள் அனைத்தும் பிரபஞ்ச சக்தியில் பூரித்து உடலில், மனதில் புத்துணர்வு ஏற்படுகிறது.

மனதில் அமைதி, அறிவில் தெளிவு, நுட்பம், வாழ்க்கை வளங்கள் அனைத்தும் பெற சக்தி அளிக்கிறது.

தன்னை உணர எத்தனிக்கும் ஒவ்வொரு ஆன்மாவுக்கும் யோக சாதகத்தில் வீரியம் பெற்று சாதகத்தில் திளைத்து, தன்னை உணர்ந்து, தன்னில் நிலைக்க தேவையான அனைத்து மார்க்கத்தையும் நல்குகிறது.

இத்தகைய தெய்வீக, அளப்பரிய ஆற்றல் களத்தினுள் தங்களையும் இணைத்துக் கொள்ளும் பேறு பெறுவீர் ! வாரீர் ! அன்பர்களே தாமிர துரிய சபைக்கு!