slideshow1 slideshow2 slideshow3 slideshow4 slideshow5 slideshow6 slideshow7 slideshow8 slideshow9 slideshow10

Spiritual Workshop

வாழ்க வையகம்            குருவே துணை              வாழ்க வளமுடன்

ஆன்மிகப் பட்டறை

திருநெல்வேலி தாமிரபரணி ஆஸ்ரமத்தில் 2005 செப்டம்பர் மாதம் முதல், ஆன்மிகப் பட்டறை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆன்மிகப் பட்டறை தொடங்கப்பட்டதின் நோக்கம் என்ன என்று பார்ப்போம்.

அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் மனவளக்கலைப் பயிற்சியில் அனைத்து அகத்தாய்வுப் பயிற்சிகளும் முடித்து ஆசிரியப் பயிற்சியும் முடித்த பெரும்பாலான அன்பர்கள் தவத்தில் ஆழ்ந்து செல்ல வேண்டும் என வேட்கை கொண்டிருந்தனர். இந்நிலையில் திருநெல்வேலி தாமிரபரணி மனவளக்கலை மன்ற அறக்கட்டளையின் அறங்காவலர் திரு. அ/நி P.R.சந்திரன் அவர்களிடம், ஆழ்ந்த நிலையில் தவம் செய்வதற்கு ஒரு பயிற்சி நடத்துவதற்கு ஏற்பாடு செய்யும்படி அன்பர்கள் வேண்டுகோள் விடுத்தார்கள். மக்களுக்கு எவ்வகையிலும் சிறந்ததையும், நல்லதையுமே செய்து கொடுப்பதே தன் வாழ்வின் லட்சியம் என்ற நோக்கில் அருள் தொண்டு புரிந்து வரும் திரு. அ/நி P.R. சந்திரன் அவர்கள், மூத்த பேராசிரியர் TKS. சுப்பிரமணியம் அவர்களை தொடர்பு கொண்டு அன்பர்களுக்கு ஆழ்ந்த தவப்பயிற்சி நடத்துவதற்கு நேரம் ஒதுக்கித் தரும்படி கேட்டுக் கொண்டார்கள். ஏனெனில் இதற்கு முந்தைய வருடங்களில் மூத்த பேராசிரியர் TKS. சுப்பிரமணியம் ஐயா அவர்கள் மாதத்திற்கு ஒரு நாள் ஞாயிறு அன்று தொடர் பயிற்சியாக “இயற்கை தத்துவ விளக்கப் பயிற்சி” நடத்திக் கொண்டிருந்தார்கள். இந்நிகழ்வு தான் அன்பர்களிடையே ஆழ்ந்த தவத்திற்கான தாகத்தை ஏற்படுத்தியது.

TKS. சுப்பிரமணியம் ஐயா அவர்கள் மனவளக்கலை பேராசிரியர். மூத்த பேராசிரியர் TKS. ஐயாவின் வாழ்க்கை துணைவி அம்மா சுப்புலெட்சுமி அவர்களும் இவ்விஷயத்தில் அவர்கள் தொண்டு செய்வதற்கு உதவியாக இருக்கிறார்கள்.

இந்நிலையில் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் மூத்த பேராசிரியர் TKS. சுப்பிரமணியம் ஐயா அவர்களுக்கு வழங்கிய ஒரு அன்பான வேண்டுகோள் நினைவு கூறத்தக்கது.

1993ம் வருடம் நாகர்கோவில் அறிவுத்திருக்கோவிலை திறந்து வைத்த அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள், இராஜபாளையம் அறிவுத்திருக்கோவிலுக்கு அடிக்கல் நாட்டு விழாவிற்கு செல்லும் போது திருநெல்வேலி வழியாக சீருந்தில் சென்றுள்ளார்கள். மகரிஷி அவர்களுடன், முன்பக்க இருக்கையில் மூத்த பேராசிரியர் TKS. சுப்பிரமணிம் ஐயா அமர்ந்திருக்கிறார்கள். திருநெல்வேலியில் பிரசித்தி பெற்ற தாமிரபரணி ஆற்றை கடப்பதற்கு அமைக்கப்பட்ட சுலோசனா ஆற்றுப் பாலத்தைக் கடக்கும் சமயம், மகரிஷி அவர்கள் மூத்த பேராசிரியர் TKS. சுப்பிரமணியம் ஐயா அவர்களின் தோள் தட்டி, திருநெல்வேலி பகுதி சைவ சித்தாந்தம் தழைத்தபகுதி பல சித்தர்களும் ஞானிகளும் ஜீவித்துக்கொண்டு இருக்கும் பகுதி, இந்தப் பகுதியில் நம் அன்பர்களில் 100 பேரையாவது ஞானிகளாக உருவாக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். அந்த மகானின் இந்த எண்ணம் ஆன்மிகப் பட்டறை உருவாவதற்கு ஒரு காரணமாக அமைந்தது என்றே சொல்லலாம்.

ஆன்மிகப் பட்டறை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டு, முதல் பட்டறை 2005ம் வருடம் செப்டம்பர் மாதம் தொடங்கியது. முதல் பட்டறையில் 351 அன்பர்கள் சேர்ந்தார்கள். அதிகமான எண்ணிக்கையில் அன்பர்கள் இருந்ததால் அதை 3 பிரிவுகளாக பிரித்து வகுப்புகள் நடைபெற்றன. ஒவ்வொரு மாதமும் 2ம் சனி ஞாயிறு நாட்களில் இந்த பட்டறை வகுப்பு நடைபெற்றது. 35 வயதுக்கு குறைவானவர்கள் ஒரு பிரிவு, 50 வயது வரை உள்ளவர்கள் ஒரு பிரிவு, 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒரு பிரிவு என 3 பிரிவாக சனிக்கிழமை மதியம், ஞாயிறு காலை மற்றும் மாலை என நடைபெற்றன.

ஆன்மிகப்பட்டறை என்று பெயர் ஏற்பட்டதற்கு என்ன காரணம் என்று பார்ப்போம். இரும்பு பட்டறையில் இரும்பை, செய்யும் பொருளுக்கு ஏற்ப அடித்து, செதுக்கி சரி செய்து தேவையானவற்றை செய்வது போல, தன்னை அறிய முயலும் அன்பர்களுக்கு, அவர்கள் முழுமைப்பேற்றை அடைவதற்கு, அவர்களிடம் உள்ள தேவையற்றவற்றை வெளியேற்றி, தேவையான நல்லவைகளை வைத்துக் கொள்ளவும், அதன்பின் அதையும் நீக்கி, நிர்குணமற்ற, நிர்பேதமற்ற, நிர் சிந்தனையற்ற, அன்பும் கருணையும் நிறைந்த ஒரு மனிதனை உருவாக்குவது என்ற நோக்கில் தான் இந்த சிறப்பு வகுப்புக்கு ‘ஆன்மிகப் பட்டறை’ என பெயர் வைக்கப்பட்டன.

படிப்படியாக முதலிலிருந்து அதாவது ஆக்கினை தியானத்திலிருந்து ஆழ்ந்து தவம் செய்ய பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

இந்த பயிற்சிகள் அன்பர்களது லௌகீக வாழ்ககையிலும் ஆன்மிக வாழ்க்கையிலும் பலப்பல மாற்றங்களை ஏற்படுத்தியது. வாழ்க்கைச் சிக்கல்கள் தீர்வு பெற்று , பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்து, குணநலன்கள் பெற்று அமைதியாக வாழ்க்கையை அமைத்துக் கொண்டதோடு, மனதினை கடந்து செல்லவும் முடிந்தது.

இதை கவனித்துக் கொண்டிருந்த மற்ற அன்பர்களின் விருப்பத்திற்கிணங்க 2007ம் வருடம் ஜீன் மாதம் 200 அன்பர்களைக் கொண்டு 2ம் பட்டறையும், 2009ம் வருடம் செப்டம்பர் மாதம் 108 அன்பர்களைக் கொண்டு 3ம் பட்டறையும், 2010 ம் வருடம் ஜீன் மாதம் 160 அன்பர்களைக் கொண்டு 4ம் பட்டறையும் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த பயிற்சியினால் அனைத்து அன்பர்களுக்கும் ஆன்ம ரீதியாக நல்ல பல அனுபவங்கள் ஏற்பட்டு அவர்கள் அமைதியாக, நிறைவாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

வாழ்க வளமுடன்!