slideshow1 slideshow2 slideshow3 slideshow4 slideshow5 slideshow6 slideshow7 slideshow8 slideshow9 slideshow10

வாழ்க வையகம்                              குருவே துணை             வாழ்க வளமுடன்

திருநெல்வேலி தாமிரபரணி அறிவுத்திருக்கோயில்

ஞானபூமியான இந்திய தேசத்திற்கும், அதனுடைய தென் மாநிலமான தமிழகத்திற்கும், தெற்குப்பகுதி எல்லையான இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடா, அரபிக்கடல் என்னும் மூன்று கடல்களும் சங்கமிக்கும் பகுதியான கன்னியாகுமரிக்கு 60 கிலோ மீட்டர் வடக்கேயுள்ள சித்தர் பூமிதான் திருநெல்வேலி நகரம். இந்நகரின் அருகாமையிலுள்ள பொதிகை மலையில் அகத்திய மாமுனிவர், அத்திரி மாமுனிவர், பாம்பாட்டிச் சித்தர் போன்ற பல சித்தர்கள் வாழ்ந்து ஜீவன் முக்தர்களாக விளங்கினர். இதுபோன்று இம்மாவட்டம் முழுவதும் பற்பல சித்தர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. எனவே மென்மேலும் இங்கு பல்லாயிரக்கணக்கான யோகிகள் உருவாகி உலகம் முழுவதும் அமைதி பெற ஏதுவாக கட்டப்பட்டதுதான் திருநெல்வேலி தாமிரபரணி அறிவுத்திருக்கோயில்.

அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களால் 18.02.1996-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப் பெற்று கட்டிடப்பணி முடிந்து, 22.04.1999-ம் ஆண்டு அறிவுத்திருக்கோயில் சமுதாயத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது. பொதிகை மலையில் துவங்கி வற்றாத ஜீவ நதியாக ஒடிக்கொண்டிருக்கும் தாமிரபரணி நதிக்கரையில், இயற்கையழகு கொஞ்சும் எழில் நிறைந்த சூழலில் அறிவுத்திருக்கோயில் அமைந்திருப்பது தியானப்பயிற்சிகளுக்கு ஏற்றதொரு சூழலாகும்.

பக்திநெறியில் ஆற்றும் இறைவழிபாட்டிற்கு மனித குலத்திற்கு பல்லாயிரம் கோயில்கள் உள்ளன. அதற்கும் மேலாக ஒவ்வொருவரும் ஞானநெறியிலும் மேம்பட்டு பிறவிப்பயனை அடையத் தவம் செய்து தத்துவம் உணர்ந்து, அறிவை அறிந்து வாழ வேதாத்திரி மகரிஷி அவர்கள் கண்ட ஞான ஆலயமே திருநெல்வேலி தாமிரபரணி அறிவுத்திருக்கோயில்.

இங்கு மனவளக்கலைப் பயிற்சிகளான எளியமுறை உடற்பயிற்சி, காயகல்ப பயிற்சி, எளியமுறை தியானப்பயிற்சிகள், எளியமுறை அகத்தாய்வுப் பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன.

முழுமை நல வாழ்விற்கான மனவளக்கலை யோகா, மகளிர் நல மேம்பாட்டுப் பயிற்சிகள், தம்பதியர் நல மேம்பாட்டுப் பயிற்சிகள், குழந்தைகளுக்கான மேம்பாட்டு பயிற்சிகள், மாணவ, மாணவியர்க்கான ஆளுமைத்திறனூக்கப் பயிற்சிகள் போன்ற சிறப்புப் பயிற்சிகளும் நடைபெற்று வருகின்றன.

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகமும், ஆழியாறு விஷன் பார் விஸ்டம் (Vision for Wisdom) அமைப்பும் இணைந்து நடத்தும் யோகமும், மனித மாண்பும் பாடத்திற்கான பட்டயம், இளங்கலை பட்டம், முதுகலைப் பட்டம் படிப்புகளுக்கான வகுப்புகளும் இங்கு நடைபெற்று வருகின்றன.

இதுபோன்ற தியான வகுப்புகளில் கலந்துகொண்டு பயிற்சி செய்யும் பயிற்சியாளர்கள், தங்களது தியானத்தை மேம்படுத்தி பயனடைய மனவளக்கலை பட்டறை வகுப்புகளும் இங்கு நடைபெற்று வருகின்றன.

உலக சமுதாய சேவா சங்கத்தின் தென்மண்டல தலைமைச் செயலகமாகவும் இவ்வறிவுத்திருக்கோயில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

மேற்கண்ட தொண்டினை செய்வதற்காக இரண்டு பெரிய அரங்குகளும், பல சிறிய அரங்குகளும், நூலகம், அலுவலகம், சமையற்கூடம், உணவருந்தும் இடம், புத்தக விற்பனை நிலையம், வாகன நிறுத்துமிடம் ஆகியவைகளைக் கொண்டிருக்கும் ஆலயம் திருநெல்வேலி தாமிரபரணி அறிவுத்திருக்கோயில் ஆகும்.

மனிதனுடைய உடல் நலத்திற்கும், மனவளத்திற்கும் மிகவும் இன்றியமையாத சக்தி காந்தசக்தி. இச்சக்தி யாருடைய உடலில் அளவு அதிகமாகவும், தரமானதாகவும், தூய்மையாகவும், அழுத்தமாகவும், திணிவு மிக்கதாகவும் இருக்கிறதோ அவரே யோகப்பயிற்சியில் வெற்றிப் பெற்று ஞானியாவார்.

பிரபஞ்ச காந்த சக்தியை அதிகமாக ஈர்க்கும் திறன் பிரமிடுகளுக்கு உண்டு. அதிலும் செம்புத்தகட்டாலான பிரமிடுகளுக்கு இத்திறன் பன்மடங்கு அதிகம். இதனை கருத்தில் கொண்டு திருநெல்வேலி தாமிரபரணி அறிவுத்திருக்கோயிலில் உருவாக்கப்பட்டுக் கொண்டிருப்பது தான் தாமிர துரிய சபை.

தாமிர துரிய சபையானது 16X16 சதுர அடி பரப்பளவில் தேக்கு மரத்தையும், மனிதனின் உடல்நோய் தீர்க்க வல்ல மரங்களையும் பயன்படுத்தி எழுப்பப்படவிருக்கிறது. இக்கட்டிடத்தின் கூரை செம்புத்தகட்டினால் வேயப்படவிருக்கிறது. மேற்கூரையானது பிரமிடு வடிவத்தில் அமைக்கப்படவிருக்கிறது.

இந்த தாமிர துரிய சபையில் அமர்ந்து தியானிப்பவர்கள் அதிகமான பிரபஞ்ச காந்தச்சக்தியை ஈர்க்கவும், அதனைப் பயன்படுத்தி தியானத்தில் வெற்றி பெறவும், அறிவையே அறிந்து தெளிவு பெறவும், ஞானவான்களாகவும் இயலும்.

720 கோடி மக்கள் கொண்ட இந்த மாபெரும் உலகை ஒரு சில ஞானிகளால் மட்டும் நன்மாற்றத்தை ஏற்படுத்த இயலாது. ஞானிகள் கூட்டம் கூட்டமாக பல்லாயிரக்கணக்கில் உருவாகி வர வேண்டும். பொருட்களின் உற்பத்தியானது கையினால் செய்யப்பட்டதற்கு பதிலாக இயந்திரங்களால் செய்யும் பொழுது சிறிது நேரத்திலேயே, அதிகமான எண்ணிக்கையில் தரமாக உருவாக்க இயல்வது போல தாமிர துரிய சபை எனும் இந்த “யந்திரம்” பல மனிதர்களை யோகிகளாகவும், பல யோகிகளை ஞானிகளாகவும் மாற்ற வல்லது. வியாதியஸ்தர்களை உடல் ஆரோக்கியவான்களாகவும் மாற்றவல்லது.

தாமிர துரிய சபை எனும் இந்த யந்திரத்தினால் உருவாகும் பல ஞானிகள் உலகையே அமைதிப்பூங்காவாக மாற்றுவார்கள். எனவேதான் தாமிரபரணி அறிவுத்திருக்கோயில் அமைந்துள்ள இடத்திற்கு வேதாத்திரி அமைதிப்பூங்கா என பெயரிடப்பட்டுள்ளது.

நீங்கள் எந்த நாட்டை சார்ந்தவர் என்றாலும், ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், எந்த மதத்தைச் சார்ந்தவரென்றாலும், எந்த ஆன்மீக அமைப்பைச் சார்ந்தவரென்றாலும் உங்களை திருநெல்வேலி தாமிரபரணி அறிவுத்திருக்கோயில் அன்போடு வரவேற்கின்றது.

அறிவுத்திருக்கோயிலுக்கு வரும் நோயுற்றவர்கள் உடல் ஆரோக்கியம் பெறுவார்கள், மன உளைச்சல் உள்ளவர்கள் மனநிறைவு பெறுவார்கள், அவர்களது குடும்பம் அமைதி பெறும், துர்க்குணம் உடையோர் நற்குணம் பெறுவார்கள், இளைஞர்கள் ஒழுக்க சீலர்கள் ஆவார்கள், உலகத்தலைவர்கள் சமாதானத் தூதுவர்களாவார்கள்.

தனிமனிதன் அமைதி மூலம் அவன் சார்ந்த குடும்பம் அமைதியுற்று சமுதாய அமைதியாக விரிந்து உலகையே அமைதிப்பூங்காவாக மாற்றவல்லது மனவளக்கலைப்பயிற்சிகள். அதனையறிந்து வரும் திருநெல்வேலி தாமிரபரணி அறிவுத்திருக்கோயிலுக்கும், தாமிர துரிய சபைக்கும் வருகைபுரிந்து பயனுற தங்களை திருநெல்வேலி தாமிரபரணி அறிவுத்திருக்கோயில் அன்போடு அழைக்கின்றது.

அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

அவர்களைப் பற்றி........

திருமூலர், திருவள்ளளுவர், தாயுமானவர், இராமலிங்கப் பெருமாள் இவர்தம் மரபு நெறி நின்று ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்ட சமுதாயப் பணி ஆற்றி வருபவர் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள். மகரிஷி அவர்கள் சென்னைக்கு அருகில் உள்ள கூடுவாஞ்சேரி கிராமத்தில் 1911-ஆம் ஆண்டு எளிய நெசவாளிக் குடும்பத்தில் பிறந்தார்.

சிறுவயதிலிருந்தே அவருக்குக் கடவுள் யார்? உயிர் என்றால் என்ன? வறுமை எதனால் ஏற்படுகிறது? என்ற கேள்விகளுக்கு விடைகாண வேண்டுமென்ற வேட்கை எழுந்தது. பல ஆண்டுகள் மேற்கொண்ட அயரா ஆராய்ச்சியின் வாயிலாக இக்கேள்விகளுக்கான விடையைத் தானும் உணர்ந்து உலகிற்கும் உணர்த்தி வருகிறார்.

சுய முயற்சியின் மூலமே வாழ்க்கையில் முன்னேறிய அவர் தியான முறைகளில் சிறந்ததான எளிய முறைக் குண்டலினி யோகம், அவயங்களை வருத்தாத உடற்பயிற்சி, தளராத தற்சோதனை, உயிர்ச்சக்தியைப் பாதுகாப்பதன் மூலம் வயோதிகத்தைத் தள்ளிப்போடும் சித்தர்கள் கண்ட நெறியான காயகற்ப யோகம் - இவை இணைந்த வாழ்க்கை நெறியைப் போதித்து, மனிதகுலம் உய்ய அருட் தொண்டாற்றி வருகிறார்.

மேலும் காந்தத் தத்துவத்தின் மூலம் தெய்வநிலை, உயிர்நிலை, அறிவுநிலை இவற்றைப் பொது அறிவு படைத்த சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் விளக்கி வருகிறார். மனிதகுல நலனுக்குக் தேவையான கருத்துகளை எளிய நடையில் தமிழிலும் ஆங்கிலத்திலும் பலநூல்களை எழுதி விளக்கி வரும் மகரிஷி அவர்கள் சுமார் ஆயிரத்து ஐந்தூறுக்கும் அதிகமான கவிகளையும் இயற்றியுள்ளார்.

மனிதகுலம் அமைதியாக வாழ ஏற்ற கருத்துகளையும் சாதனை முறைகளையும் உலகமெங்கும் பரப்பிட 1958-ஆம் ஆண்டில் வேதாத்திரி மகரிஷி அவர்கள் நிறுவிய உலக சமுதாய சேவா சங்கம் இன்று இந்தியாவியிலும், மலேசியா, ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா, போன்ற நாடுகளிலும் பல கிளைகளைக் கொண்டு இயங்கி வருகிறது.

இல்லறத்தில் இருந்தவாறே துறவற மனப்பான்மையை மேற்கொண்ட மகரஷி அவர்கள் தமது 81 வயதிலும் உலக சமாதானத்திற்காக அயராத சேவை புரிந்து வருகிறார். பல வருடங்களாக வௌருநாடுகளுக்கும் சென்று ஆன்மீகப் பணியாற்றி வருகிறார்.

தத்துவத்திலே அவ்தைதத்தையும் யோகத்திலே ராஜயோகத்தையும் பாமர மக்களுக்கும் உணர்ந்து கொள்ளும் வகையிலே அவர் கற்பிக்கும் உளப்பயிற்சி அமைந்திருக்கின்ற காரணத்தால், 'பாமர மக்களின் தத்துவ ஞானி' (Common Man's Philosopher) என்று போற்றப்படுகிறார்.

மகரிஷி அவர்கள் வெளிருயிட்டுள்ள எந்த ஒரு கருத்தும் பகுத்தறிவிற்கோ விஞ்ஞானத்திற்தோ புறம்பானதல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி : உலக சமுதாய சேவா சங்கம் ,1993