slideshow1 slideshow2 slideshow3 slideshow4 slideshow5 slideshow6 slideshow7 slideshow8 slideshow9 slideshow10

வாழ்க வையகம்                                       வாழ்க வளமுடன்

வாழ்த்து மடல்

அறிவிலும், உடலமைப்பிலும் சிறந்து விளங்கும் மனிதன் தனது பிறவியின் பெருமதிப்பை உணர்ந்து வாழவேண்டும். இத்தகைய உயர் முறை வாழ்வால்தான் மனிதன் வாழ்வு இன்பமயமாக இருக்கும். தனது பிறப்பின் பயனான அறிவுநிலையையும், இறைநிலையோடு இணைந்து பிறவிக்கடலை கடக்க முடியும். இப்பேற்றினைப் பெறுவதற்கு மனிதன் தனது கருமையப் பெருநிதியைப் பற்றியும் அதற்கு ஆதாரமாகவும் பேரியக்கத் தோற்றம், இயக்கம் இவற்றிற்குக் காரணமாகவும், உள்ள வான்காந்தமெனும் தெய்வீக ஆற்றலையும் உணரவேண்டும்.

காந்தநிலை யறியாமல் கடவுள்நிலை யறிவதோ
                  கருமையம் அறியாமல் அறிவினை யறிவதோ
மாந்தராக வாழுகின்ற மாண்புடைய எவருக்கும்
         மாற்றுவழி தத்துவத்தில் விஞ்ஞானத்தி லில்லையே
   காந்தஆற்ற லுட்பொருள் கருமையத் துட்பொருள்
            கடவுள்எனும் இறைவெளியே இறுக்க ஆற்ற லும்இதே
    காந்தமெனும் நிழல்விண்கள் தன்மாத்திரை ஐந்துமாய்
          கடைநிலையில் மனமுமாய் கலந்துளது இறையோடு.

கடலும் அலையும் போல இறைநிலையும், அறிவும் ஒன்றில் மற்றாகவும், இரண்டும் ஒன்றாகவும் உள்ள மறை பொருள் ஆகும். இறைவெளியென்ற பேராற்றலோடு அதன் திணிவினால் தோன்றிய விண்துகளின் சுழல் விரைவால் எழும் அலையும் கூடியே காந்தமெனும் பேராற்றலாகத் திகழ்கின்றது. காந்த ஆற்றல் தான் மாற்றமடைகின்றது. அதே காந்தம் தான் ஜீவ இனங்களில் பஞ்ச தன்மாத்திரைகளுக்கு மேலாக மனம் என்ற அனைத்துணரும் பேராற்றலாகவும் இயங்குகின்றது. இறைநிலையையும் அறிவையும் அறிந்தால் தான் மனிதன் வாழ்வில் முழுமை பெற முடியும். அதற்கு முதலில் மனதுக்கு உட்பொருளாக உள்ள அறிவையறிய வேண்டும். மன அலைச்சுழல் விரைவைக் குறைத்து அறிவையறியும் முறையே குண்டலினியோகம். குண்டலினி யோகத்தைத்தான் மனவளக்கலையென்று வழங்குகிறோம்.

மனித இனத்தின் பிறவிப் பயனாகிய அறிவையும், இறைநிலையையும் உணர்ந்து வாழ்வாங்கு வாழவும், பிறவிக்கடலைக் கடக்கவும் வாய்ப்பாக உள்ள அருட்பேராற்றலின் இல்லமே அறிவுத்திருக்கோயில் ஆகும். மனித குலத்திற்கு அருட்சுடராக விளங்கும் அறிவுத்திருக்கோயில் தாமிரபரணி மனவளக்கலை அறக்கட்டளை கட்டிமுடித்து 22.04.99 அன்று திறப்புவிழா நடத்த இருக்கும் தெய்வீக நிகழ்ச்சி சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சிந்தனையாற்றலையும் உடல் உழைப்பையும் பயன்படுத்தி இவ்வறிவுத் திருகோயிலைக் கட்டி முடித்துள்ள அறங்காவலர்களை வாழ்த்தி மகிழ்கிறேன். தாமிரபரணி மனவளக்கலை மன்ற உறுப்பினர்களையும் பாராட்டுகிறேன்.

ஆழியார்                                           அன்புள்ள

17.3.99                வாழ்க வளமுடன்       அருள் தந்தை வேதாத்திரி